ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

உண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா?

தேதி:
டிசம்பர் 4, 2004

தலைப்பு: வெறுப்பு

அன்பான‌ "ஆன்சரிங் இஸ்லாம் தள‌குழுவினரே", உங்கள் தளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டக்கூடியதாக தெரிகிறது. ஏன் நீங்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் பொதுவான விவரங்கள் பற்றி எழுதக்கூடாது, அதாவது ஓர் இறைக்கொள்கையைப் பற்றி இன்னும் பொதுவான விவரங்கள் பற்றி எழுதலாமே. உங்களுக்கு ஒரு அமைதியான உலகம் தேவையானால், எங்களுடன் சகோதர அன்பில் கைகளைக் கோர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய‌வெறுப்புணர்ச்சி என்ற தீயை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

நம்முடைய பதில்:

உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

உங்கள் மனவேதனையை தெரிவிக்க நேரம் ஒதுக்கியமைக்காக உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் ஆசிரியர்களின் ஒரு நபராக நான் என் கருத்தைச் சொல்கிறேன், அதாவது இந்த தளத்தில் எழுதும் அனைவரும் இஸ்லாமிய மக்களாகிய உங்கள் மீது தூய‌அன்பும் அக்கறையும் கொண்டுள்ளவர்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் என் மனைவியும் எங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான காலம், அதாவது 23 ஆண்டுகளை 98 சதவிகிதத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் பட்டணத்தில் கழித்துள்ளோம். எங்களுக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அதிகமாக நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதால், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்துக்கொண்டு, கைகோர்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டு, எங்களுக்கு இடையே இருக்கும் பொதுவான விவரங்களை மட்டும் பேசிக்கொண்டு இருந்தோம் என்று பொருள் அல்ல. இல்லை, நாங்கள் வீணாக காலம் கழிக்க பொதுவானவைகளை மட்டும் பேசுவதில்லை. நாங்கள் எங்கள் இஸ்லாமிய நண்பர்களை நேசிக்கிறோம், அதனால், தேவனுடைய வசனங்களை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். ஒரு வேளை, அவர்களின் சிறுவயது முதல் அவர்களுக்கு போதிக்கப்பட்டவைகளுக்கு எதிராக இருந்தாலும் சரி, சத்தியத்தை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். சத்திய வேதம் கூறுகிறது "மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும், வெளிப்படையான கடிந்துக்கொள்ளுதல் நல்லது" (நீதிமொழிகள் 27:5) மற்றும் "பரியாசக்காரனை கடிந்துக்கொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள், அவன் உன்னை நேசிப்பான்" (நீதிமொழிகள் 9:8)

நம்மில் ஒவ்வொருவரும், "வெறுப்புணர்ச்சியை பரப்புவது" மற்றும் "உண்மை அன்புடன் சத்தியத்தை சொல்லுவது" (எபேசியர் 4:15) என்பவைகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பகுத்தறிய கற்றுக் கொள்ளவேண்டும். கண்பார்வை இல்லாத ஒரு மனிதன், ஒரு ஆபத்தான இடத்தில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கிறார் என்பதைக் காணும் போது, அவரை எச்சரித்து சரியான வழியைக் காட்டுவது "வெறுப்புணர்ச்சி" ஆகுமா அல்லது "அன்புடன் எச்சரிப்பது ஆகுமா?" சொல்லுங்கள்.

சாலொமோன் நபி இவ்விதமாக கூறுகிறார்: "மனுஷனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதன் முடிவோ மரண வழிகள்" (நீதிமொழிகள் 14:12). இப்படி எச்சரிக்கும் வார்த்தைகளை நீங்கள் "வெறுப்புணர்ச்சியை தூண்டும்" வார்த்தைகள் என்பீர்களா அல்லது அக்கறையுள்ள வார்த்தைகள் என்பீர்களா?

மஸிஹா இயேசு கூறுகிறார்: "... நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாய் இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்,ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன். நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாய் இருந்து மனந்திரும்பு" (வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18;3:19).

மேற்கண்ட விதமாக இயேசு கடிந்துக்கொண்டு கூறுவதினால், அவர் "வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறார் அல்லது வெறுக்கிறார்" என்று பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நீங்கள் இதனை அங்கீகரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்: அதாவது ஒரு நபர் மீது நீங்கள் அக்கறை உள்ளவராக இருந்தால், அவர் துக்கப்படுவார் என்று தெரிந்திருந்தாலும், அவருக்கு நிச்சயமாக உண்மையை கூறுவீர்கள். இப்போது இதனை கவனியுங்கள்...

இஸ்லாமியர்கள் முஹம்மது என்ற ஒரு மனிதர் சொன்னதை மட்டுமே நம்புகிறார்கள். ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கட்டுரை எழுதுபவர்கள் அனைவரும், பாதுகாக்கப்பட்ட பரிசுத்த வேதமாகிய பைபிளை நம்புகிறார்கள், பைபிளில் நாற்பதுக்கும் அதிகமான தீர்க்கதரிசிகளால் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள் உள்ளன, மற்றும் அவைகளை அப்போஸ்தலர்கள் கூட அங்கீகரித்துள்ளனர். ஆறு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்து தீர்க்கதரிசனங்களையும், இயேசுவாகிய மேசியாவினால் நிறைவேறியது. ஆனால், முஹம்மது ஒரு புதிய செய்தியைக் கொண்டுவந்தார். இறைவனின் உண்மையான வேதம் பைபிள் தான் என்றும், குர்ஆன் உண்மையான வேதம் இல்லை என்றும் நாங்கள் 100 சதவிகிதம் நம்புகிறவர்களாக இருந்தும், இந்த உண்மையை இதர மக்களுக்குச் சொல்ல ஒரு சிறு முயற்சியையும் நாம் எடுக்கவில்லையானால், நாங்கள் எப்படிப்பட்ட துர்பாக்கிய மக்களாக இருப்போம். இதன் மூலமாக உண்மை எது பொய் எது என்று மக்களுக்கு புலப்படுமே.

துரதிஷ்டவசமாக, இஸ்லாமின் செய்திக்கும், பைபிளின் செய்திக்கும் பொதுவாக இருப்பது சொற்ப விவரங்களே! இவ்விரண்டு புத்தகங்களும் இறைவனுக்காக பேசுகின்றன. ஆனால், இரண்டும் அடிப்படியிலேயே ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. நம்முடைய வாழ்வு குறுகியது, ஆனால், நித்தியம் என்பது நீண்டது, இதனால், பொய்யான அமைதியை நம்பாமல் இருப்போமாக. நாம் கணக்கு ஒப்புவிக்க ஒரு நாள் சர்வ வல்லவராம் இறைவனின் முன்பு நிற்பதற்கு முன்பாக அவரோடு ஒப்புரவாகி, சமாதானம் அடைந்தோமா இல்லையா என்பது தான் முக்கியமானது.

இந்த சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். ஒரு வேளை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் பதித்த கட்டுரைகளில் உண்மைக்கு புறம்பான விவரம் இருக்குமானால் அதனை எங்களுக்கு அறியத் தாருங்கள். எங்கள் தளம் கீழ்கண்ட வாக்குறுதியைத் தருகிறது:

If you find any factual mistakes [whether misprints or a false representation of doctrines] on these pages, or things that are worded in an offensive way, contact us, we would like to correct that. See our site policies.

இந்த வாக்குறுதியில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். எங்கள் தளத்தில் உண்மைக்கு புறம்பான விவரம் இருப்பதாகவோ அல்லது "வெறுப்பை" வளர்க்கும் விதமாக விவரங்கள் இருப்பதாகவோ நீங்கள் கண்டால், அதனை தயவுசெய்து எங்களுக்கு தெரிவியுங்கள். ஆனால், சரியாக குறிப்பிட்டு எழுதுங்கள். அதாவது, எந்த கட்டுரையில் நீங்கள் பொய்யையும், வெறுப்பையும் கண்டீர்கள் என்றும், மற்றும் ஏன் அக்கட்டுரை வெறுப்பானதாக தெரிகிறது என்பதையும் தெளிவாக எழுதுங்கள். இப்படி தெளிவாக நீங்கள் எழுதாத பட்சத்தில், இவர்கள் வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சொல்வதை நிறுத்தி விடுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இதற்கு இடையில், அன்பு என்றால் என்ன என்பதை தேவன் எப்படி கூறுகிறார் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன் (அன்புக்கு நேர் எதிரானது வெறுப்பு ஆகும்):

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும்,
அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,
சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும்,
மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,
அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 

எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும்,
என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,
அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;
அன்புக்குப் பொறாமையில்லை;
அன்பு தன்னைப் புகழாது,
இறுமாப்பாயிராது, 
அயோக்கியமானதைச் செய்யாது,
தற்பொழிவை நாடாது,
சினமடையாது,
தீங்கு நினையாது,
அநியாயத்தில் சந்தோஷப்படாமல்,
சத்தியத்தில் சந்தோஷப்படும்.
சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும்.

அன்பு ஒருக்காலும் ஒழியாது.... (1 கொரிந்தியர் 13ம் அதிகாரம்)

எங்கள் தளம் "அன்பு" என்ற வார்த்தைக்கு தேவன் கொடுத்த விளக்கத்திற்கு பொருந்துகிறதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

தாழ்மையுடன்
பிராஹிம்

ஆங்கில மூலம்: Does telling the truth equal spreading hatred?

இதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்.